புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரம் மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வர மீனவர்கள் படகு மீது மோதினர். இதனால் மீனவர்களின் படகு கடுமையாக சேதமடைந்தது கடலில் மூழ்கியது.
படகில் இருந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் ஆகிய 4 மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு இலங்கையிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்திய கடற்படையிடம் இன்று (ஜன.23) காலை ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி
இதையடுத்து உயிரிழந்த மீனவர்களின் உடல்களை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் உடல்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி. அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் கோட்டைப்பட்டினம் விசைப்படகு தளத்திற்கு கொண்டு வரப்பட்ட நான்கு மீனவர்களின் உடல்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் முகாம், தங்கச்சிமடம், உச்சிப்புளி, திருப்புல்லாணி ஊர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நான்கு பேர்களின் உயிரிழப்பிற்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18ஆம் தேதி முதல் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கையிலிருந்து 4 மீனவர்களின் உடல்கள் வந்தடைந்தன