மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (டிச. 24) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பொதுமக்கள், நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். இதன்படி பொதுமக்களுக்கு உயர்தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள், புதிய மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே பல்வேறு உயர்தர மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகளுடன் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதனடிப்படையில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் கருவி, ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு போன்ற மருத்துவ வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இதேபோன்று தமிழ்நாடு மெடிக்கோ லீகல் மேன்வல்-2020 புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், டையாலிசிஸ் பிரிவு போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகளால் பொதுமக்களுக்குப் புதிய மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி!