புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பொது மக்களிடையே முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு 9 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்பட்டு, இதன் பயனாக 17066.38 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முதல்கட்ட பணிகளுக்காக ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தின் முதல்கட்ட பணிகளை தொடர்ந்து விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பாக இருக்கும்", என்றார்.