புதுக்கோட்டை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று, தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
முன்னர், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து எதிர்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் நிர்வாகிகள் இடத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதோ அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக மூத்த முன்னோடிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்கு இருந்து வருகிறது.
இதனால் திமுக நிர்வாகிகள் அவர்களது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளின் போது மேடைகளிலும், போஸ்டர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி ஸ்டாலினும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர்களது கோரிக்கையை தெரிவித்து வந்தனர். திமுகவினரின் இந்த கோரிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் தி.மு.க நிர்வாகிகள் சிலர் 'எதிர்காலமே...' என்ற தலைப்பில், `இன்பநிதி பாசறை' என்ற பெயரில், செப்டம்பர் 24-ம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர்கள் அடித்து நகரம் முழுவதும் ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகிய நிர்வாகிகள் இவ்வாறு போஸ்டர் ஒட்டி இருந்தனர். இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக கூறி, அவர்களை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசியபோது, "திமுகவில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அமைப்பாளர் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. திட்டமிட்டு எங்களைப் புறக்கணித்துள்ளனர்.
சமீபத்தில் புதுக்கோட்டைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, அவரை பக்கத்தில் நெருங்ககூட விடவில்லை. தலைவர் கருணாநிதியின் பேரன் அரசியலுக்கு வரும்போது, தலைவர் ஸ்டாலினின் பேரன் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. நாளை அவரும் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது. எங்களது எதிர்கால சந்ததிக்காக அவர்களும் எங்களைப் போன்று பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இன்பநிதி எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்பதற்காக `இன்பநிதி பாசறை' ஆரம்பித்திருக்கிறோம்.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகத் தானே நாங்கள் அறிவித்து நோட்டீஸ் ஒட்டினோம். இதில், என்ன தவறு நடந்திருக்கிறது. நேற்று நோட்டீஸ் ஒட்டினோம். இன்று நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கையை அனைத்து விஷயங்களுக்கும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் முன்னர் எனது மகன் உதயநிதி உள்பட, எனது குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று பல்வேறு மேடைகளில் பேசி வந்தார். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் களம் காணும்போது, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி, தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினருமானார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகள், திமுக நிர்வாகிகள், அமைச்சர்களின் மிகுந்த வேண்டுகோளுக்கு இணங்க, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம் பிடித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். மேலும் தற்போது திமுகவின் நிழல் தலைவராகவும், திமுகவில் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்திலும் உள்ளார்.
இவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியின் அரசியல் வரவை, அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் இன்பநிதி கலந்து கொண்டார். மேலும் இன்பநிதியை, அவரது தந்தையான உதயநிதி ஸ்டாலின் இழுத்து, மேடை நிகழ்ச்சிகளில் நிற்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது.
இந்நிலையில் அனைத்திற்கும் ஒரு படி மேலே போய் புதுக்கோட்டை திமுகவினர், இன்பநிதியின் படத்தை போட்டு, எதிர்காலமே... என போஸ்ட்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டிய சம்பவம் புதுக்கோட்டை அரசியல் வட்டாரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஒரு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் இருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திமுக நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகம் நீக்கம் செய்யப்பட்டாலும், இந்த சம்பவத்தின் மூலம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காவது வாரிசான இன்பநிதியும் வரும் காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என ஆதரவாகவும், இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிர்ப்பாகவும் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.