புதுக்கோட்டை: அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு சுழற் சங்கம் சார்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரத்த வங்கி சேமிப்பு உபகரணங்களையும், 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை ஊழல் தடுப்புச் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். அதன்படி கரோனா காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ரத்த வங்கி சேமிப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனைத்து நோயாளிகளும் பயனடையும் வகையில் புதுக்கோட்டை சுழற் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். சமூக நலப்பணிகளை இதுபோன்ற நிறுவனங்கள் செய்துவருவதாலும், கரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு அரசிற்கு உறுதுணையாக இருப்பதாலும் முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளின் மூலம் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் வரும் காலங்களில் அதிகமாக ரத்த சேமிப்பு செய்து ரத்த வங்கியின் பணிகளின் மூலம் ஏழை, எளிய பொதுமக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - மா சுப்பிரமணியன்