புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சின்னத்தாள் என்பவர் நோய்த்தொற்று காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் குழு அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று இருப்பதையும் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயல் குறைந்தும் இருப்பதை கண்டறிந்தனர்.
எனவே ரத்த அழுத்தத்தை சீராக்கி அதற்கான மருந்து அவருக்கு உடனடியாகச் செலுத்தப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றின் காரணமாக அவருக்கு ரத்தம் உறைவது குறைந்து காணப்பட்டது. எனவே நோயாளிக்கு அனைத்து இடங்களிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்த ரத்தம் உறைதலை சீர் செய்வதற்காக, ரத்த காரணிகளான கிரையோபிரேசிப்பிடேட் என்ற திரவம் செலுத்தப்பட்டது.
மேலும் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஃபேக்டர் 8 எனும் காரணியும் அவருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது. நோயாளி மூச்சுவிட சிரமப்பட்ட காரணத்தினால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருதயத்திற்கு அருகில் உள்ள பெரிய ரத்தக்குழாய் மூலமாக திரவங்களும் ரத்த காரணிகளும் செலுத்தப்பட்டன.
ஆறு நாள்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையிலும் நோயாளி குணமாகததால் கழுத்தில் துளையிட்டு டிரக்கியாஸ்டமி குழாய் மூலமாக 23 நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அகநோக்கியின் மூலம் மூச்சுக்குழாய் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டது. இப்போது நோயாளி குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்.
இதுபற்றி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், "நோய்த்தொற்று ஏற்பட்டால் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவை செயலிழந்து காணப்படும். இதில் இரண்டு உறுப்புகளுக்கு மேல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவது சிரமம். அந்தநிலையில் 28 மருத்துவர்கள் அடங்கிய குழு இருபத்தொன்பது நாள்கள் செயற்கை சுவாசம் தந்து மொத்தமாக 42 நாள்கள் சிகிச்சை அளித்து நோயாளி வீடு திரும்புவது மிகவும் பாராட்டத்தக்க செயலாகும்.
தனியார் மருத்துவமனைகளில் இப்படி ஒரு தீவிர சிகிச்சை அளித்திருந்தால் 15 லட்ச ரூபாய் வரை செலவாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு அரசு, சுகாதாரத் துறை அமைச்சர் ரத்த காரணிகளை அரசு மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கு வழி செய்தது இந்த சமயத்தில் பேருதவியாக இருந்தது" என்று குறிப்பிட்டார் .
இதையும் படிங்க:
புதுக்கோட்டையில் அமைதியாக நடைபெற்ற ஊராட்சி தேர்தலுக்கான முதல் நாள் வேட்பு மனு தாக்கல்