விதிகளை மீறி 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டுள்ள லெம்பாலக்குடி, செண்பகப்பேட்டை சுங்கச்சாவடிகளின் தூரங்களைக் கருத்தில்கொண்டு அவற்றின் சுங்கக் கட்டணங்களை 60 நாள்களில் மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவறினால் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பாலக்குடி சுங்கச்சாவடி சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த இளங்கோ உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான நெடுஞ்சாலைத் துறை விதிகளின்படி 60 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்படக் கூடாது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பாலக்குடி பகுதியில் சுங்கச்சாவடி அமைந்திருக்கும் நிலையில் 60 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக சிவகங்கை மாவட்டத்தில் செண்பகப்பேட்டை பகுதியில் மற்றொரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இது தேசிய நெடுஞ்சாலைகள் விதிகளுக்கு எதிரானது. ஆகவே செண்பகப்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "விதிகளை மீறி 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் இரண்டு சுங்கச்சாவடிகள் அமைந்திருக்கும் நிலையில், தூரத்தைக் கருத்தில்கொண்டு அவற்றின் சுங்கக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்.
60 நாள்களுக்குள்ளாக இதனைச் செய்யத்தவறினால் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பாலக்குடி சுங்கச்சாவடி சட்டவிரோதமானதாகக் கருதப்படும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.