புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுகிறது. இதைத்தடுக்கும் வகையில் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25,000 லிட்டர் கள்ளச்சாராயம்
மாவட்டத்தில் இதுவரை 25,000 லிட்டருக்கு மேல் கள்ளச் சாராயம் கீழே ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரம்பக்குடி பகுதியில் இன்று (ஜூன்.06) காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வானக்கண் காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்தத் தகவலையடுத்து, அந்தப் பகுதியில் காவல் துறையினர் சோதனை செய்தனர்.
800 லிட்டர் சாராய ஊறல்
அப்போது சந்திரமோகன் என்பவர் அந்தப் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சாராய ஊறலை பூமிக்கடியில் புதைத்து வைத்து, சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்து பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது.