புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே உள்ள சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பரம்பூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்தபோது ரூபாய் 1.74 லட்சத்தை பெட்ரோல் பங்க்கிலேயே வைத்துவிட்டுச் சென்றார். இதனைக் கண்ட அங்கு பணிபுரிந்துவரும் ஆயுள் தண்டனை கைதிகளான கார்த்திக், புஷ்பராஜ் ஆகியோர் அந்த பணத்தை எடுத்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தார். இன்று ஜானகிராமனை வரவழைத்து அந்த பணத்தை ஒப்படைத்த சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, கைதிகளை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, ‘சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறைக் கைதிகளிடம் நல்ல எண்ணங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பணத்தை எடுத்துக் கொடுத்த கைதிகளுக்கு நல்லொழுக்க சான்றிதழ் அளிக்கப்படும். அது அவர்களுக்கு விடுதலை காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்’ என கூறினார்.