புதுக்கோட்டை: அறந்தாங்கியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் குளிர் சாதன வசதியுடன் இருக்கிறார் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இருந்து தற்போது புழல் சிறைக்கு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். அவரை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரியுள்ளனர்.
சட்ட முறைப்படி யாருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அந்த வசதிகளை மட்டுமே நாங்கள் செய்து கொடுப்போம்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எந்தவிதமான மரியாதையும் கொடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுக்கிறோம். ஆனால் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்.
கடந்த ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. தற்போது 90 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மீன்வளத்துறை சார்ந்த மேற்படிப்பினைத் தொடங்கி மீனவ இளைஞர்கள் படிப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது அறந்தாங்கி முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயம்சண்முகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் R.R. K.கலைமணி, நகர செயலாளர் ஆனந்த், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து, சதீஷ், பாஸ்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி