திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கேடயம் அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அமைப்பு குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் தங்கராணி வித்தியாசமான செயலை செய்துள்ளார்.
அதாவது, பெண் காவலர் தங்கராணி, அறந்தாங்கி கடை வீதியில் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட காணொலியை புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பெண் காவலர் தங்கராணி கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்பதும், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் காவலர் தங்கராணியின் சிலம்பம் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை மடக்கிப் பிடித்த காவல்துறை