புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரதுரை. இவர் முன்னால் திமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது இவரது மனைவி மாலா அதே பகுதியில் கறம்பக்குடி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றுகிறார்.
பதவியேற்ற நாள் முதல் தன்னை அப்பகுதி அரசு அலுவலர்கள் மதிப்பதில்லை. எந்த அரசு நிகழ்வுகளுக்கும் அழைப்பதில்லை. என்னை மட்டமாக நடத்துகின்றனர் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து மாலா தெரிவித்தபோது, “நான் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், என் கணவர் இறந்த நிலையில் ஒரு பெண்ணாக தனியாக வசிப்பதால் என்ற காரணத்தினாலோ என்னை மிகவும் மட்டமாக நடத்துகின்றனர்.
எந்த ஒரு தகவலும் சொல்லுவதே கிடையாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிடும் போது எங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் செல்கின்றனர்.
எனது உரிமைகளும் கடமைகளும் பாதிக்கப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்திருக்கிறேன். இதுகுறித்து விரைவாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.