புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம், திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50), கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இரவு ரோந்துப் பணியில் பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆடுகளை வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால், ஆய்வாளர் பூமிநாதன், அவரது இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் சென்ற வாகனத்தை இடைமறித்து விசாரித்துள்ளார்.
அதில் தஞ்சாவூர் மாவட்டம் தோகூரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறார்களுடன் சேர்ந்து, அவர்கள் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை வெட்டிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அளித்த புகாரின் பேரில், கீரனூர் காவல் நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில், மணிகண்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதனுக்கு, காவல் துறை சார்பில் அரசு மரியாதையும், தமிழக அரசு சார்பில் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது.
பிடிபட்ட மூன்று நபரில் ஒருவர் 5ஆம் வகுப்பும், மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்ட மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் காவல் துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறார்களுக்கான வழக்கு புதுக்கோட்டை இளைஞர் நீதிக்குழுமத்தில் விசாரணையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின், இன்று (செப்.29) விசாரணைக்கு வந்த இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சுமத்தப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்!