புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வன்னிய விடுதியில் ஜல்லிக்கட்டு, கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டு, கீழதானியத்தில் வடமாடு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையக்கோயில் சுப்பிரமணிய சுவாமி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த நாட்டார்கள் சார்பில் இன்று (ஜனவரி 19) ஜல்லிக்கட்டுப் போட்டி கோயில் திடலில் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்குள்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை காலை 8.30 மணிக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வருவாய்க் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க வீரர்கள், பார்வையாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
முதலாவதாக வடக்குவாசல் கருப்பர் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500 காளைகளும் 150 வீரர்களும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். மூன்று சுற்றுகள் முடிந்து போட்டி நடைபெற்றுவருகிறது.
ஏராளமான பரிசுப் பொருள்கள்
போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கு குக்கர், சில்வர் குடம், தங்க நாணயம் உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டுவருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக்கை மூடுக! - எடப்பாடி பழனிசாமி