புதுக்கோட்டையில் கடந்த வருடம் தமிழ்நாடு அரசின் சிறைத் துறை சார்பில் சிறைவாசிகள் பணி செய்யும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தமிழ்நாடு அரசால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் 20 பணியாளர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆவார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் சிறை துறை காவலர்கள் இவர்களை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இங்கு வந்தார். அப்போது சரவணன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் எடையுள்ள ரூபாய் 60,000 மதிப்புள்ள தங்கச் செயின் அறுந்து கீழே விழுந்துவிட்டது.
அதனை கவனிக்காமல் சரவணன் பெட்ரோலை நிரப்பிவிட்டு சென்றுவிட்டார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த சிறைவாசியான பெட்ரோல் பங்க் ஊழியர் கிறிஸ்து ஆரோக்கியராஜ் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்து பெட்ரோல் பங்கு அலுவலர் விஜயகுமார் மற்றும் உதவி சிறை அலுவலர் பாலமுருகன் ஆகியோரிடம் தகவல் கொடுததார்.
இதனையடுத்து அந்த செயின் புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கச் செயினை தொலைத்த சரவணன் செயினை காணவில்லை என்று தேடிவந்தபொழுது அவரிடம் நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் விசாரணை செய்து அவரிடம் செயினை ஒப்படைத்தார்.
இந்த தங்கச் செயினை நேர்மையோடு ஒப்படைத்த பெட்ரோல் பங்க் ஊழியர் சிறைவாசி கிறிஸ்து ஆரோக்கியராஜை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.