புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரனின் மகன் அசோக்ராஜ். 20 வயதான அசோக்ராஜ் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழில் பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளர். கடந்த 10 நாட்களாக திடீரென்று கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்லும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியும் போக மாட்டேன் என மறுத்துள்ளார்.
நேற்று மதியம் மண்ணெண்ணையை டின்னை எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர்கள் மண்ணெண்ணையை பறித்து வைத்துக் கொண்டு புத்திமதிகளைக் கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே அசோக் ராஜ் வீட்டில் காணவில்லை. அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பிறகு ஆலங்குடி காவல் நிலையத்தில் அசோக் ராஜின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோயில் காட்டில், முற்றிலும் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். செய்தி கேட்டு காட்டுப் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை சோதனையிட்டதில் அது அசோக்ராஜ்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
அதன்பின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அசோக்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் மரணத்திற்கு உறுதிபடுத்தப்பட்ட காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அத்துடன் பொதுஇடத்தில் உடல் கிடந்துள்ளதால் இது கொலையாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன்பு மாணவன் அசோக்ராஜ் பல தடவை தற்கொலை முயற்சி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.