புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலரான ஜீவானந்தம் என்பவருக்கு நேற்று (நவ.30) மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள முத்து மீனாட்சி என்ற தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சிறப்பு மருத்துவர் இல்லாததால், ஜீவானந்ததிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள், இதனாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து உயிரிழந்த ஜீவானந்தத்தின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்ததும் புதுக்கோட்டை நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
திடீரென மருத்துவமனை முன்பாக முன்னாள் கல்வி அலுவலரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.