புதுக்கோட்டை: சமீப காலமாக பொன்னமராவதி பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் திருடப்பட்டு வருவதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில் பொன்னமராவதி காவல்துறையினர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தெரியாமல் இருக்கும் பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஒரிஜினல் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு, போலியான ஏடிஎம் கார்டை அவர்களிடம் கொடுத்து விடுவதும், ஏடிஎம் கார்ட் உரிமையாளர் சென்ற பிறகு பணத்தை திருடிச் செல்வதும் என நூதனமாக திருட்டை செய்து வருகின்றனர்.
மேலும், சந்தை நாட்களான சனி மற்றும் செவ்வாய்கிழமை நாட்களில் அதிகமாக இது போன்ற சம்பவம் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று பொன்னமராவதி அருகே உள்ள சுந்தர சோழபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் பொன்னமராவதி எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது ஒரு நபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை மாற்றி சென்று உள்ளார்.
இதன் பின்னர் பணம் எடுத்ததாக பாக்கிய லட்சுமியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது. உடனடியாக பாக்கிய லட்சுமி இந்த சம்பவத்தைக் குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து பொன்னமராவதி காவல் துறையினர் எஸ்பிஐ ஏடிஎம் இல் உள்ள சிசிடிவி காட்சிகளை, ஆராய்ந்துப் பார்த்துள்ளனர். அப்போது அந்த மர்ம நபர் கார்டை மாற்றி பணத்தை திருடியம் தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் உருவமும் போலீசாரிடம் அகப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி மூலம் எடுக்கப்பட்ட விவரங்களை வைத்து பொன்னமராவதி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்தனர். பின் அந்த நபரை நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் இது போன்று மதுரை மாவட்டத்திலும் இவர் மீது 6 வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சரவணக்குமாரை பொன்னமராவதி கோர்ட்டில், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். தெரியாத நபர்களிடம் தங்களது ஏடிஎம் கார்டு குறித்த விபரம் மற்றும் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்று வங்கி சார்பில் பல்வேறு முறை அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு, குறிப்பாக கிராம வாசிகளுக்கு இதுக் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தங்களுடைய பணத்தை இழக்க கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரூ.500 கொடுத்தால் ரூ.2000.. போலீஸ் சீருடையில் ரூ.37 லட்சம் நூதன கொள்ளை.. வேலூரில் நடந்தது என்ன?