புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்ட அமமுக சிவகங்கை தொகுதி வேட்பாளர் தேர்போகி பாண்டி மக்களிடம் பேசியதாவது, மக்களாகிய உங்களிடம் பெரிய ஜாம்பவான்கள் என்று கூறிக்கொண்டு ஓட்டு கேட்டு அனைவரும் வந்திருப்பார்கள். இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியது மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறினார்.
இதுவரை பாஜக ஆட்சியை மாற்ற கூட்டணிக் கட்சிகளும் எந்த ஒரு நலன்களையும் மக்களுக்கு செய்ததே இல்லை, இதனை மக்கள் உணர வேண்டும். திருநாவுக்கரசர் புதுக்கோட்டை ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு எத்தனை குளங்கள், எத்தனை கண்மாய்கள், எத்தனை மக்கள் இருக்கின்றனர் என்று கூட தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
மக்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுகிறவர்கள் நாங்கள்தான். கண்டிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவையோ அதனை கேட்டு அறிந்து செய்வோம் என்று உறுதியளித்தார்.
கட்சிக்காரர்கள் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், தயங்காதீர்கள் ஏனென்றால் அது மொத்தமாக நீங்கள் கொடுத்த வரிப் பணம்தான். அதனை எல்லாம் கொள்ளை எடுத்துக்கொண்டு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் கூச்சப்படாமல் பணம் வாங்கலாம், தவறே கிடையாது என்று கூறினார்.