திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்திலுள்ள மக்களவைத் தொகுதி அலுவலத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலைப்போல் காங்கிரஸ்-திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றிபெறும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தலைவிட நேரடித் தேர்தலே முறையானதாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அரசின் அறிவிப்புகள் பாதிக் கடலைத் தாண்டியதாக உள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள் இருக்கும்போது, தெலங்கானாவில் காவல் துறையினர் என்கவுன்டர் என்ற பெயரில் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
நீதிமன்றங்கள் முறையாக விசாரணை செய்து மரண தண்டனை கூட வழங்கலாம் என்று கூறிய அவர், குற்றவாளிகளைக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றால், நீதிமன்றங்களை மூடிவிடலாமா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவர்கள் இருக்கும்வரை தேர்தல் நடக்காது - மாணிக்கம் தாகூர் எம்.பி.