புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா இன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள் (70). இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பக்கத்தில் ஊரில் வசித்து வருகின்றனர். வீரம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜூன். 16) காலை ஒன்பது மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீரம்மாள் வீட்டு வழியாக சென்ருள்ளனர். அப்போது, வீரம்மாள் சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்ததும் அவர், அணிந்திருந்த தங்க நகை திருடு போயிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கணேஷ் நகர் காவல் துறையினர், தடயவியல் துறையினர், மோப்பநாய் பிரிவினர், திருச்சி சரக டிஐஜி ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஒரு வருடத்தில் இதுவரை மூன்று சந்தேகத்திற்கிடமான கொலைகள் நடந்துள்ளது என்தும் குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: சிறையிலிருந்த பிரபல ரவுடியிடம் செல்போன் பறிமுதல்!