தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா உள்ளிட்ட வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதும், பள்ளிகளை சுத்தம் செய்ய வற்புறுத்துவதும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும் அதிகரித்துவருகிறது. இந்த செயல்களில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தரை சீரமைப்பு பணியில், சித்தாள்களை போன்று பள்ளி மாணவர்களை மணல் அள்ள சொல்லி வேலை வாங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சீரமைப்பு பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மையக்குழு உறுப்பினர் ப.கண்ணன் என்ற ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்தாள்களைப் போன்று பள்ளி குழந்தைகளை வேலை வாங்கிய பள்ளியினை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசு குழந்தை தொழிலாளர்களை ஒழித்து கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் தொழில் நிறுவனங்களிடமும் குழந்தை தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அரசு பள்ளிகளிலேயே குழந்தைகளை தொழிலாளர்களை போன்று நடத்தும் பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதியில் போராட்டம்