புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரண்டு மகள்கள் ரிதன்யா பிரியதர்ஷினி, அனன்யா ஆகியோருடன் இணைந்து கீழ பலுவஞ்சி, மேலப் பழுவஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "நகை கடன், மகளிர் சுய உதவி குழுக் கடன், விவசாயக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ள ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. கடந்த முறை நகைக் கடன் தள்ளுபடி என பொய்யான வாக்குறுதி அளித்தவர்களிடத்தில் நீங்கள் ஏமாந்தீர்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு ஒரு வீட்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம், ஒரு வீட்டிற்கு ஆயிரத்து 500 ரூபாய் மாதந்தோறும் பணம் ஆகியவற்றை அளிக்கப் போகும் அரசு, நம்முடைய அதிமுக அரசு மட்டுமே. மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வமும் வருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். மக்களாகிய நீங்கள்தான் என்னைத் தேர்தலில் நிற்கச் சொன்னீர்கள். அதனால்தான் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். உங்களுக்காக நான் இருக்கிறேன்.
என்னுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விராலிமலை தொகுதிக்காக நான் உழைத்துக்கொண்டே இருப்பேன். கஜா புயல், கரோனா ஆகிய பேரிடர் காலங்களில் உங்களோடு துணை நின்று உங்களுக்காக உழைத்தேன். மக்களுக்கான நல்லத் திட்டங்களை கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற, கொடுக்கப் போகும் ஒரே சின்னம் இரட்டை இலை. எந்தக் குழப்பத்திற்கும் ஆளாகாமல், பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும். ஊருக்கு வெளியே உள்ள காவல்காரனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
தனது அப்பாவுக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த அமைச்சர் விஜய பாஸ்கரின் மகள், " இவரை என்னுடைய அப்பா என்று சொல்வதை விட, உங்கள் வீட்டுப் பிள்ளை என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைக்காக நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அவர் உங்களுக்காக உழைத்தார், உழைக்கிறார், உழைத்துக் கொண்டே இருப்பார். கடந்த முறை வாய்ப்பு கொடுத்தீர்கள், காவிரி நீரைக் கொண்டு வந்தார். இந்த முறை வாய்ப்பு கொடுங்கள், காவிரி ஆற்றையே வெட்டிக் கொண்டு வருவார். அவருக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : அமமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு