புதுக்கோட்டை: தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துலட்சுமி. இவருடைய கணவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன் இவரும் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்து உள்ளார். மேலும் அந்த பகுதியில் அவர் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்து வந்து உள்ளார். சங்கர் சொத்துக்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது பஞ்சாயத்துக்கு உட்பட்ட இளங்குடிபட்டி அய்யனார் கோயிலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அய்யனார் கோயிலில் சாமி கும்பிட்டு உள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் கிடந்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கொலை குறித்து நமணசமுத்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் சென்று விட்டு நின்று விட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே விசாரணை மேற்கொண்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் வருடம் தோறும் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15 வருடமாக திருவிழா நடைபெறாமல் இருப்பதாகவும், இந்த திருவிழா நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சங்கர் என்ற சுந்தர கோபாலன் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தடைபட்ட திருவிழா குறித்த பல்வேறு கட்ட சமரச பேச்சு வார்த்தைகள் பலமுறை நடைபெற்று வந்ததாகவும், இந்த திருவிழா நடைபெறுவது குறித்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதற்கு காரணமான சங்கர் என்ற சுந்தர் கோபாலனை கொலை செய்ததாக கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் சங்கர் கொலை செய்யப்பட்ட விதம், விசாரணை அடிப்படையில் கார்த்திக் மட்டும் தான் இந்த கொலையை செய்தாரா? அல்லது வேறு கூட்டாளிகள் யாரும் உள்ளனரா?, இந்த கொலைக்கான காரணம் கோயில் மட்டும் பிரச்சனை தானா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாலிபால் போட்டியை வேடிக்கை பார்த்த நபரை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர்கள் கைது!