புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் பிப்ரவரி 21அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்ட தொடக்க விழாவில் அதிகமான பொதுமக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு அந்த ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் புளியோதரை, முட்டை அடங்கிய சாப்பாடு பொட்டலங்களை வழங்கியுள்ளனர்.
அதனை பலர் அங்கேயே சாப்பிட்டுள்ளனர். சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலதாமதமாக அந்த உணவை உண்ட திருநல்லூர், கலர்பட்டி, ஆச்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு (40), புவணேஸ்வரி (40), கருத்தமணி (70), சத்தியா (25), ரத்தினம் (75), மாரிக்கண்ணு (48), மல்லிகா (41), ராசாத்தி (29), சரண்ராஜ் (11), தேன்மொழி (15), தீபரஞ்சனி (15), யோகராஜ் (12) உள்பட 38 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 38 பேருக்கும் திருநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (பிப். 22) முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் தகவல் அறிந்தவுடன் கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி, அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் ராமசாமி, ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம், மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயக்குமார், திருநல்லூர் பழனியப்பன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டோரிடம் நலம் விசாரித்தார்.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, புளியோதரையை காலம் கடந்து உண்டதால் உணவு ஒவ்வாமை, சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறினர்.