புதுக்கோட்டை: சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானத்தை பெருக்கும் நோக்கிலும், பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும், தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும் கிராம மட்டத்தில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுக்களாகும். இந்தக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன், பொருளாதாரக் கடன், வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் நோக்கமே மாறும் வகையில் நிதி நிறுவனங்களின் அதிகாரத்தை மீறிய செயலால் ஒரு கிராமமே அவதிக்குள்ளாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்டது மேலத்தோப்பு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வானம் பார்த்த பூமி என்பதால், இவர்களுடைய வருமானம் பெரும்பாலும் கூலித் தொழிலையே நம்பி இருக்கிறது.
குறிப்பாக அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூபாய் 120 கூலிக்கு விவசாய வேலை, கட்டட வேலை போன்ற குறைந்த வருமானத்தில் தங்களது வாழ்க்கையே நடத்தி வருகின்றனர். இந்த கூலி தொகையானது தினந்தோறும் இவர்களுடைய குடும்ப செலவிற்கே பற்றாக்குறையாக உள்ளது.
இதனால் இது போன்ற சுய உதவிக் குழுக்கள் மூலமாக பல்வேறு நிதி நிறுவனங்களில் கடந்த பத்து வருடத்திற்கு முன்னர் ரூபாய் 10 ஆயிரத்தில் தொடங்கியது இவர்களது கடன். இந்தக் கடனை கட்ட முடியாமல் அடுத்தடுத்த நிதி நிறுவனங்களில் அதிகமாக கடன் பெற்று, பழைய கடனை கட்டுவது, அந்த கடன் தொகையை கட்ட முடியாமல், மற்றொரு நிதி நிறுவனம் மூலம் மேலும் அதிகப்படியான கடன் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: "தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பயன் அளிக்கும்" - கல்வியாளர் சதீஷ் கருத்து
இந்த நிதி நிறுவனங்கள் ஒரு கடனை பெற்று கட்ட முடியாமல் தவிக்கும் பெண்களிடம், மற்றொரு பெயர் கொண்ட நிதி நிறுவனத்தை அறிமுகப்படுத்தி கடன் கொடுத்து கடன் வாங்கும் சுய உதவி குழு பெண்களை அதிக கடனாளியாக உருவாக்கியுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு முறை கடன் கொடுக்கும்போதும், கடன் பெறுவோருக்கு காப்பீடு மற்றும் பத்திர கட்டணம் (டாக்குமெண்ட் ஃபீஸ்) என தனி வசூலும் நடைபெற்று வருகிறது. மேலும் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடன் பெறும் பெண்களிடம் குறைந்த வட்டி என்று கூறி, வாங்கிய தொகையில் 25 சதவீதம் வட்டியாக செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அடுத்தடுத்த கடன்களால் இந்த கிராமத்தில் பல்வேறு பெயர்களில் உள்ள 24 நிதி நிறுவனங்கள் மூலம் வார கடன், மாத கடன் என 20க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள சுய உதவி குழு பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் மூன்று லட்சம் வரை கடன் உள்ளது.
அந்த கடன்களுக்காக நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை ஆறு மணி முதல் இரவு 11 மணி வரை நின்று கடன் தொகையை வசூலித்து விட்டு தான் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கிறார்கள்.வேலைக்கு சென்றால்தான் இந்த கடன் தொகையை தங்களால் கட்ட முடியும் என்றும், வேலைக்கு கூட செல்ல முடியாமல் தடுத்து தங்களது கடன் தவணை தொகையை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியர்கள் மிகக் கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவதாக சுய உதவி குழு பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்தத் தொகையை கட்ட தவறும் பெண்களின் வீட்டில் உள்ள கால்நடைகள், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் செல்கின்றனர். சமீபத்தில் கூட இந்த நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற ஒரு பெண்ணின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக இந்த பெண்ணும் மருத்துவமனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு கடன் தவணைத் தொகையை வசூலிக்க வந்த ஊழியர்கள் வீட்டில் கடன் தொகையை செலுத்த யாரும் இல்லாததால், வீட்டில் உள்ள படிக்கும் அவர்களது பிள்ளைகளை அழைத்துச் செல்வதோடு, அருகில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு இந்த குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு மிரட்டியும் வந்துள்ளனர்.
அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உங்களிடம் கடன் வாங்கியவர்கள் பெற்றோர். ஆனால் குழந்தைகளை நீங்கள் அழைத்துச் செல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறி, அந்த குழந்தைகளை மீட்டெடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.
மேலும் கடன் தொகையை செலுத்துங்கள் "நீங்கள் சோறு தானே சாப்பிடுகிறீர்கள், இல்ல வேறு ஏதாவது திங்கறீங்களா" என மிக அசிங்கமாக பேசுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கடன் தொகையை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் கேவலமாக பேசுவதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எங்களுக்கு உருவாகியுள்ளது. மேலும் இதனால் இரண்டு குடும்பங்கள் இந்த ஊரைவிட்டு காலி செய்து விட்டனர் என்றும் தெரிவித்தனர்.
எனவே அதிகப்படியான கடன்களில் மூழ்கியுள்ள நாங்கள் கடன் தொகையை செலுத்துகிறோம் என்றும், ஆனால் எங்களை காப்பாற்றும் வகையில் அரசு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கால அவகாசம் பெற்று தர வேண்டுமென சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். சுய உதவிக் குழு, தனிநபர் வருமானத்தை பெருக்கும் வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இருந்த நிலையில், தற்போது அது தமிழகத்தில் பல குடும்பங்களை சீரழித்து வருகின்றது என புலம்புகின்றனர்.