புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் புகார் அளிக்க வந்தார். புகார் அளிக்க வந்த இளம்பெண்ணிடம் செய்தியாளர்கள் விசாரித்தபோது, அவர் கூறியதாவது, எனது பெயர் பாலமணி. நான் பிறந்தது திருமயம் தாலுகாவில் உள்ள காணப்பூர் ஆகும். எனது தந்தை பாண்டிமுத்துவும், தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு பானுமதி, பாக்கியலெட்சுமி என இரு சகோதரிகள் உள்ளனர். நான் பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறேன்.
இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக சென்னையில் வீட்டு வேலை செய்து வந்தேன். இந்த மாதம் முதல் வாரத்தில் சென்னை வந்த எனது தந்தை கிராமத்துக் கோவிலுக்கு பால்குடம் எடுக்க வேண்டும் எனக்கூறி அழைத்து வந்தார்.
இதையடுத்து வீட்டுக்கு அழைத்து வந்த நாள் முதல் எனது தந்தை என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து, எனது உடலின் பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என்னை வீட்டை விட்டு வெளியில் விடவில்லை. பிறகு நான் சம்மதிக்கிறேன் என்று கூறியதால், வீட்டை விட்டு வெளியே விட்டார். பின்னர் அவரிடம் இருந்து தப்பி வந்து மலுக்கன்பட்டியில் உள்ள அக்காவீட்டிற்கு சென்றேன்.
அப்போது அங்கு எனக்கு ஆறுதலாக இருந்தவர் மலுக்கன்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாண்டியன். எனது துன்பத்தைக் கேட்டு விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னதால் கடந்த 17ம் தேதியன்று திருவப்பூர் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டோம்.
அதைக் கேள்விப்பட்ட என் தந்தை பாண்டிமுத்து எங்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதற்கு பயந்து தான் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தோம் என்றார். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அதைத் தைரியமாக நடவடிக்கை எடுக்க மகள் காவல் நிலையத்தை நாடியதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.