பொங்கல் திருநாளில் மஞ்சள் கொத்து கட்டிப் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். இந்த மஞ்சள் கொத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே கெண்டையன்பட்டியிலுள்ள விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், மஞ்சள் நல்ல விளைச்சலாகியுள்ளதாகவும், அதனால் விலை தாறுமாறாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்கு விற்பனை செய்வதற்காக மஞ்சள் கொத்து அறுவடை இன்று நடைபெற்றது.
வியாபாரிகளும் மக்களும் மஞ்சள் கொத்தை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கி செல்வது வழக்கம். கடந்தாண்டு 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் கொத்தை, இந்தாண்டு அடிமட்ட விலைக்கு வணிகர்கள் வாங்கிச் செல்வதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அதிக விளைச்சலால் இதுபோன்ற விலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு கரும்பு கொள்முதல் செய்து விற்பனை செய்வது போல மஞ்சள் கொத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு: 10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்!