புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கிராம மக்கள் சுமார் 60 பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மணல் எடுத்து செல்வது தொடர்பாக இன்று புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்களது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டி அருகில் உள்ள புத்தாம்பூர் கிராமம். அங்கு பல்வேறு குடும்பத்தினரும் சமுதாயத்தினரும் வசித்துவருகிறோம். எங்களுக்கு விவசாயம் மட்டுமே தொழில். அதை வைத்துதான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக மணலையும் நீரையும் பாதுகாக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களது ஊர் நடுவே உள்ள குறிச்சி குளத்தில் ஆதனக்கோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில் சுமார் 100 லோடு மண்ணை வெட்டி எடுத்துச் சென்றுவருகிறார்.
நாங்கள் இதனை எத்தனையோ முறை தடுத்தும் அவர் கேட்பதாக இல்லை. நாங்கள் முழு ஆதாரத்துடன் தான் இதை செய்கிறோம் என்று பதில் கூறுகின்றனர். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று புகார் அளித்தாலும் அவர் அதை வாங்கிக் குப்பையில் போட்டுவிடுகிறார்.
விவசாய பூமியை இப்படி ஒரு பாறையாக மாற்றுவதற்கு யாருக்கு உரிமை உண்டு? குளத்தின் அருகே சென்று உண்ணாவிரதம் இருந்து அவர்களை விரட்டினோம். அப்படியும் சிறிது நாட்களில் அலுவலர்களின் துணையோடு மீண்டும் மணல் அள்ளத் தொடங்கிவிட்டனர்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் சென்று இதனை நிறுத்துங்கள் என்று கூறினால் எங்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இரவு பகல் பாராமல் ரோடு ரோடாக மண்ணை அள்ளிக் கொண்டுச் செல்கின்றனர். இப்படியே அவர்கள் மண்ணை கடத்திச் சென்றால் நாங்கள் விவசாயத்திற்கு என்ன செய்வது? விவசாயமும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் பிச்சைதான் எடுக்க வேண்டும். அதனால் மண் திருட்டு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.