புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சங்கர் (70). இவர் தனது தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை தினமும் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொன்முச்சந்தி பகுதியில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) வழக்கம் போல் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கொடும்பாளூர் என்ற இடத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது, சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த இருசக்கர வாகனம், விவசாயியின் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விவசாயியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:செருப்பால் அடித்த மனைவி - கொலை செய்த கணவன்