சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ளக் கோரி முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும்; ஜல்லிக்கட்டு ஆர்வலருமான சி.விஜயபாஸ்கர் இடையீட்டு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.17) தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "பன்னெடுங்காலமாக தமிழ் மண்ணின், மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக ஜல்லிக்கட்டு விளங்கி வருகிறது. இது வெறும் விளையாட்டு அல்ல; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளில் நிறைந்திருக்கும் ஒரு கலாசார பெருவிழா.
காதலையும், வீரத்தையும் போற்றிப்பாடிய சங்ககாலத் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் காப்பியங்களில் ஜல்லிக்கட்டு 'ஏறு தழுவுதல்' எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அன்று தொட்டு இன்று வரை தமிழ் மக்களின் இல்லங்களில் குடும்பத்தில் ஒருவராய் ஜல்லிகட்டு காளைகள் வளர்க்கப்படுவதே அதற்கு சான்று.
தமிழ்நாட்டிலேயே அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற மாவட்டம் நான் சார்ந்திருக்கிற புதுக்கோட்டை மாவட்டம். குறிப்பாக, விராலிமலை, திருநல்லூர், திருவப்பூர், நார்த்தாமலை, ராப்பூசல், கோவிலூர், அன்னவாசல், இலுப்பூர், வாராப்பூர், கீழக்குறிச்சி, உசிலங்குளம், ஆவூர், கோவில்பட்டி, மரமடக்கி வம்பன் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வருடா வருடம் மிகச்சிறப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், அண்டை மாவட்டமான திருச்சியில் சூரியூர், நவல்பட்டு, இருங்களூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவையாக கருதப்படுகிறது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தின் தச்சங்குறிச்சியில் மாநிலத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிற சிறப்புமிக்க பெருமையும் உண்டு. அந்தளவுக்கு மாவட்ட மக்களின் உணர்வுகளில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒன்றாக கலந்திருக்கின்றன. ஆவணங்களின் படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 5733 குடும்பங்கள் 5943 நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருநாள் தைப்பொங்கல். அத்திருநாளின் மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று கடவுளுக்கு நிகராய் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி வணங்கி மகிழும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
விவசாயிகள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்கள் பிள்ளைபோல் காளைகளை வளர்த்து; களத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கும், காளையருக்கும் உரிய மரியாதை தந்து; அரசு விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் கலாசார விழாவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுக்கு அளித்த அரசாணையால் ஜல்லிக்கட்டு காளைகளின் வளம் அதிகரிப்பதோடு, அவை நடத்தப்படும் கிராமங்களின் பொருளாதாரமும் உயர்கிறது. குறிப்பாக, நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பதோடு அவை பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 'ஒரு சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்பட வேண்டும்' என்பதையும் UNESCO வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948-ன் படி ஜல்லிக்கட்டை அனுமதிப்பது அவசியம்" என்று அம்மனுவில் குறிப்பிட்டு ஜல்லிகட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட Writ Petition (C) No 24 of 2016 எனும் வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும் எனக்கோரி முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும்; ஜல்லிக்கட்டு ஆர்வலருமான சி.விஜயபாஸ்கர் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனவரி முதல் மே வரையிலும் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி- தமிழக அரசு