புதுக்கோட்டை: புதுக்கோட்டை சமஸ்தானம் என்பது மிகவும் பழமையான சமஸ்தானமாகும். சுதந்திர இந்தியாவில் இந்தியாவோடு இணைந்த கடைசி சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்தான். அன்றைக்கு கஜானாவில் இருந்த அனைத்துப் பொருட்களையும், நாணயங்களையும் இந்தியாவிற்கு அர்ப்பணித்ததோடு மன்னர்கள் ஆண்ட அரண்மனை உள்ளிட்டவைகளையும் அரசிடம் அப்போதைய மன்னர் ஒப்படைத்தார்.
அதே போன்று, தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் மன்னரின் அரண்மனையையும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் புதுக்கோட்டை மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் ஒப்படைத்தார். அவருக்கு கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அந்த நூற்றாண்டு விழாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகோபாலத் தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதன்படி புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று அறிவித்தார்.
ஆனால், ஓராண்டு காலம் ஆகியும் இதுநாள் வரை மணிமண்டபம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தரவில்லை குறிப்பாக, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மன்னர் நூற்றாண்டு விழாக் கமிட்டினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் முன்பக்கத்தில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், வேறு இடத்தில்தான் நாங்கள் ஒதுக்கி தருவோம் என்று மாவட்ட நிர்வாகம் கூறிவிட்டது. இருந்தாலும் ஓராண்டு காலமாகியும் இதுனால் வரை இடம் ஒதுக்கப்படாமல் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் மன்னரின் 101-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், அவருடைய கணவர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மன்னர் நூற்றாண்டு விழா கமிட்டியினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாருபாலா தொண்டைமான், "தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும், சமஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்த மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவில் கடந்த ஆண்டு முதலமைச்சர், அவருக்கு அரசு சார்பிலேயே மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இது எங்களது குடும்பத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் இதுநாள் வரை அதற்கு உண்டான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித் தரவில்லை. பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், அவர்கள் நாங்கள் கேட்கின்ற இடத்தில் இடத்தை ஒதுக்கி தராமல் சுடுகாட்டிற்கு அருகே அவர்களாகவே 35 சென்ட் மட்டும் இடம் ஒதுக்கி தருகின்றனர்.
இது எங்களுக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது. 100 ஏக்கர் கொடுத்த எங்களுக்கு 2 ஏக்கர் கொடுக்க அரசு யோசிக்கிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நாங்கள் கேட்கும் இடத்தை ஒதுக்கித் தந்து மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.