புதுக்கோட்டை : முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். இவர் பல வருடங்களாக மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். மேலும், அமைச்சர்கள் பலருடன் இணைந்து சோலார் பவர் பிளான்ட் உள்பட பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளைச் செய்து வருகிறார்.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு எஸ்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி தொழிலதிபர் ராமச்சந்திரனுக்குச் சொந்தமான நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முத்துப்பட்டிணம் கிராமத்தில் உள்ள அவரது வீடு, அவரது தொழில் முறை நண்பரான கறம்பக்குடியில் உள்ள கரிகாலன் வீடு மற்றும் மணிவண்ணன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர்.
மேலும், தொழிலதிபர் ராமச்சந்திரனின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டு, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோதமான பணப் பரிமாற்றம் தொடர்பாக, நேற்று (நவ.25) மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறை நடைபெற்ற சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் தொடர்பாக, இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், தற்பொழுது மீண்டும் தொழிலதிபர் ராமச்சந்திரன் உடைய நண்பர்கள் வீடுகளில், அமலாக்கத் துறையினர் மத்திய பாதுகாப்பு படை உதவியோடு மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரு இடங்களிலும் நடைபெற்ற சோதனையானது நிறைவு பெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருநாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?