புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை அரைஞானம்பட்டியை சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர் ஜோதிக்கு (28) 40 லட்ச ரூபாய் பணமும் நகையும் தருவதாகக் கூறி பேஸ்புக் மூலமாக அடையாளம் தெரியாத நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஜோதியின் சகோதரிக்கு பேஸ்புக் மூலமாக அடையாளம் தெரியாத ஒரு நபர் லண்டனிலிருந்து குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அந்த உரையாடலில் தானும் தன் குடும்பமும் லண்டனில் வசிப்பதாகவும், இந்தியாவில் வறுமையில் வாடும் சில குடும்பங்களுக்கு உதவ விரும்புவதாகவும் நல்லவர் போல பேசியிருக்கிறார்.
இதை நம்பிய ஜோதியின் சகோதரி தனது சகோதரனின் எண்ணை அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்துள்ளார். அடையாளம் தெரியாத லண்டன் நபர் ஜோதியின் குடும்ப நிலவரங்களை சாமர்த்தியமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர்களின் ஏழ்மை நிலைமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜோதியின் வீட்டிற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் பணம், நகை ஆகியவற்றை அனுப்பி வைப்பதாகக் கூறிய அடையாளம் தெரியாத நபர், அதனை ஜோதியை நம்ப வைத்திருக்கிறார். பின்னர் வங்கியில் பணம், நகை ஆகியவற்றை அனுப்பி வைப்பதாகக் பேஸ்புக் மெசேஞ்சேர், வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இந்தக் குறுஞ்செய்தியை நம்பிய ஜோதி தன்னுடைய வாழ்வில் வசந்தம் வரும் எனக் காத்திருந்தார். அடையாளம் தெரியாத நபரோ வங்கில் செலுத்த முடியவில்லை, பார்சலாக அனுப்பி விடுகிறேன் என மீண்டும் ஜோதியை நம்பவைத்துள்ளார். பணம், நகையைப் பார்சலாக அனுப்பியது போல போலி புகைப்படம் ஒன்றினையும் பேஸ்புக் மெசேஞ்சேர், வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்.
இரண்டு நாள் கழித்து டெல்லி விமான நிலைய கஸ்டம்ஸிலிருந்து பேசுவதாகக் கூறிய ஒரு நபர், ஜோதிக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் சுங்க வரி செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜோதி பார்சலைப் பெற்றுக் கொள்ள பணம் செலுத்த வேண்டும் என கிடுக்குப்பொடி வைத்து பேசியிருக்கிறார்.
வறுமை, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என ஆசையில் ஜோதி அந்த கஸ்டம்ஸ் அழைப்பை நம்பி 30 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். இதுவே அந்த போலி கஸ்டம்ஸ் ஆசாமிக்கு வாடிக்கையாகி போக, ஜோதியும் ஏடிஎம் மூலமாக சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக்கணக்கிற்கு அடுத்தடுத்து சுமாராக 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார்.
தங்க முட்டையிடும் வாத்து போல ஜோதியிடம் பணம் முழுவதையும் பறித்துக் கொண்ட அந்த நபர், பின்னர் ஜோதியிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்கவில்லை. இதனிடையே பேஸ்புக் மூலமாக லண்டன் நபர் ஜோதிக்கு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தான் பணம், நகையை அனுப்பியும் இந்திய அரசின் வரியால் தான் ஜோதிக்கு வந்து சேரவில்லை எனக் கூறி ஜோதியின் ஆசையை மீண்டும் தூண்டியுள்ளார்.
இரண்டு லட்ச ரூபாய் பணம் கட்டினால் பார்சல் ஜோதி வீட்டிற்கு வந்து விடும் என நம்பிக்கையூட்டி பணம் செலுத்தச் சொல்லியிருக்கிறார். இந்த முறை சுதாரித்துக் கொண்ட ஜோதி முன்னமே தான் அனுப்பி வைத்த 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார். இதைக் கண்டு கொள்ளாத லண்டன் நபர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓட்டுநர் ஜோதி நேற்று (நவ.15) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அம்மனுவில்,”பேஸ்புக் மூலமாக எனது குடும்ப கஷ்டங்களை தெரிந்துகொண்ட லண்டன் நபர், உதவுவதாக கூறி இரண்டே கால் லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார். 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை பார்சலில் அனுப்பி உள்ளதாக அவர் கூறியதை நம்பி ஐந்து தவணையாக ஏடிஎம் மூலமாக பணம் செலுத்திய நிலையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் கேட்டு லண்டன் நபர் வற்புறுத்திவருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:முகநூல் பழக்கம்: 10 சவரன் தங்க நகையை பறிகொடுத்த பெண்!