புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதையடுத்து அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பண்டிகை நேரங்களில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போன்ற போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும். பருவமழை பெய்துவரும் நிலையில் மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணி புறக்கணிப்பை விடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினால், அரசு நிச்சயம் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விவசாயிகள் நேரடியாக முதலமைச்சரைச் சென்று சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயலில் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் செடிகள் நடும் வேலைகள் நடந்துவருகின்றன. புயலால் வீடு இழந்தோருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது'