ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோருக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுகவினர் 14 பேரும் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு உறுப்பினரும் வெற்றி பெற்றனர்.
இதில் திருவரங்குளம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணியின் மனைவியும், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஞான இளங்கோவனின் மனைவியும் வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் இருவரும் தாங்கள் சேர்மனாக வேண்டுமென்று வெற்றி பெற்ற பிற கவுன்சிலர்களை வசப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலரான வெற்றியப்பனை பதவி ஏற்புக்காக தங்கமணி அழைத்துவந்தார். பின் வெற்றியப்பன், தங்கமணி காரில் ஏறிச் செல்லவிருந்தபோது அங்குவந்த ஞான இளங்கோவன் வெற்றியப்பனிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் வெற்றியப்பன் அங்கிருந்து காரில் செல்ல முற்பட்டார், அதற்குள் ஞான இளங்கோவன் தரப்பினர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெற்றியப்பன் வந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விருதுநகரில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: 40 பேர் கைது!