புதுக்கோட்டை: குளத்தூர் தாலுகா, பாலண்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகபிரசாத். இவர் கால்நடை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நாராயணமூர்த்தி மற்றும் ராகுல் பிரசாத் ஆகிய நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் கால்நடை குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சில வரலாற்றுத் தடயங்களை இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
உருக்கு ஆலை தடயங்கள்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரும்பு உருக்கு ஆலைத் தடயங்களையும் இரும்பு துண்டுகளையும் இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சிதைந்த நிலையில் குடியிருப்புகளும் முதுமக்கள் தாழியையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து முழுமையாக ஆய்வு செய்ய இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள ஆய்வு
இதுகுறித்து கால்நடை ஆய்வாளர் முருகபிரசாத் கூறுகையில், "கள ஆய்வுக்கு செல்லும் பொழுது முதுமக்கள் தாழிகளை பார்த்தேன். அப்போது தான் தோன்றியது அப்பகுதியில் ஏதோ வரலாற்று தடயங்கள் இருக்கும் என்று.
அதனால் ஆகஸ்ட் 25ஆம் தேதி எனது நண்பர்கள் நாராயணமூர்த்தி மற்றும் ராகுல் பிரசாத் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆய்வு செய்தேன். அதன் பின்பு 13 நாட்கள் களஆய்வு நடைபெற்றது. அதில் மூன்று இரும்பு உருக்கு ஆலைகள் மற்றும் இரும்பு துண்டுகள் ஆகியவற்றை கண்டுபிடித்தோம்.
இது கட்டாயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தடயங்கள். இப்பகுதியில் சுமார் 5 முதல் 10 ஏக்கர் அளவில் இது போன்ற நிறைய வரலாற்று தடயங்கள் உள்ளன.
இதனை தொல்லியல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இது தெரியாத சிலர் வரலாற்றுத் தடயங்களை ஜேசிபி கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சிங்கார சென்னை 2.0 : பணிகள் குறித்து அரசு விளக்கம்!