புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் பழனிச்சாமி என்பவரது வீட்டில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முற்பட்ட பழங்காலத்து ஓலைச்சுவடிகள் இருப்பதாக அறந்தாங்கி வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு தலைமையிலான குழு அந்த ஓலைச்சுவடியை ஆவணப்படுத்துவதற்காக சென்றனர்.
அப்பொழுது பழனிச்சாமியின் வீட்டை சோதனையிட்டபோது அங்கு ஆறு தலைமுறைகளுக்கு முற்பட்ட கால கட்டங்களில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஓலைச்சுவடிகள் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு, தொல்லியல் துறையினர் வசம் ஒப்படைப்பதற்கான ஆயத்தபணிகளை மேற்கொண்டனர்.
மேலும், தொல்லியல் துறையின் ஆய்வின் மூலமாகவே அந்த ஓலைச் சுவடிகள் எப்போது எழுதப்பட்டது என தெரியவரும். அதன் பின்னர் அரசின் தொல்லியல் துறையினரால் அது பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.