புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே 1338 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. அதே பகுதியில் வேளாண், தோட்டக்கலை, வனம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அலுவலகங்களும் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் மயில்கள் மான்கள் பறவைகள் என அனைத்தும் அதிக அளவில் காணப்படும். ஆனால் கஜா புயலின் தாக்கத்துக்குப் பிறகு நிறைய மரங்கள் சாய்ந்ததால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில் தற்போது கோடைக்காலம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
இதனால் வனப்பகுதியில் வாழும் விலங்குகள் தண்ணீருக்கு அலைகிறது. இதற்கான நடவடிக்கையை எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதால் அங்குள்ள விலங்குகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திருவரங்குளம் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து மான் ஒன்று தண்ணீரைத் தேடி காட்டைவிட்டு சாலை பகுதிக்கு வந்தபோது நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாக வனத்துறையினர் மானை அப்புறப்படுத்த வராமல் இருந்தது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.