புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதற்காக வெளியூரிலிருந்து மாடுகளை வாங்க, வியாபாரிகள் வருகை தருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாள்களாக சந்தைப்பேட்டை பகுதியில் மாடுகள் காணாமல் போவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தைப்பேட்டைப் பகுதியில் வசித்துவரும் ரமேஷ் தனது வீட்டின் முன்பு வழக்கம்போல் கன்றை கட்டி வைத்துள்ளார். அதிகாலை பார்க்கும்போது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த கன்று இல்லாததால் ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியபோது, தனது கன்று விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மாடுகளுடன் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அங்கு சென்று விசாரித்தபோது கார்த்திக் என்பவர் அந்தக் கன்றை தங்களிடம், ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக அதனை வாங்கியவர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து கார்த்திக்கை தேடிப்பிடித்து விசாரித்தபோது, கன்றைத் திருடிவந்தது விற்றது தெரியவந்தது. பின்னர் அக்கன்றை மீட்டுவந்து நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கன்று திருடிய நபரை விசாரித்தனர். அவரை விசாரணை செய்ததில், கார்த்திக் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அவ்வப்போது செலவுக்காக மாடுகளைத் திருடி விற்பனை செய்வதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இத்திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்று திருடிய நபரைப் பொதுமக்களே மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.