புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து விராலிமலை வழியாக சுமார் 28 பசு மாடுகளை ஒரே வாகனத்தில் ஏற்றிச் செல்ல சிலர் முற்பட்டனர். அந்த வாகனத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தடுத்து நிறுத்தி மாடுகளை மீட்டனர்.
குறுகிய வாகனத்தில் 28 பசு மாடுகளையும் ஒன்றாக ஏற்றிச்சென்ற வாகன ஓட்டுநர் அடைக்கலம் என்பவர் மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அடைக்கலத்தை கைது செய்தனர், மேலும் மாடுகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஒரே வாகனத்தில் ஒன்றன் மீது ஒன்றாக மாடுகளை ஏற்றி வந்தது தவறு என்று எச்சரித்தனர். அதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தும்போதே நான்கு மாடுகள் உயிரிழந்தன. அதையடுத்து, மீட்கப்பட்ட மாடுகளை புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று அதற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து வாகன ஓட்டுநர் அடைக்கலம் மீதும், வாகனத்தின் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. நீதிபதியின் உத்தரவுக்கு பின்பே மாடுகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.