புதுக்கோட்டை: தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டை சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய வேளாண் சட்டத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் உள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டினால் தமிழ்நாட்டிற்கு நிறைய முதலீடுகள் கிடைத்துள்ளன. இதனால், வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் 54 கோடி மதிப்பீட்டில் 272 ஏரி, 21 கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும். புதுகையில் புதிய பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படவுள்ளது.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் அரசு செலவில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விஜயதசமியன்று மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவு