சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 29 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொது மக்கள் நலன் கருதி தொற்றின் சமூகப்பரவலை தடுக்கும் நோக்கில் அறந்தாங்கியை அடுத்துள்ள மேலமங்கலம் வடக்கு இளைஞர்கள் நாள்தோறும் மஞ்சள் வேப்பிலை கலந்த நீரை வீதிகளில் தெளித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது வீட்டில் இருக்கும் நபர்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள்தூள் கொடுத்து கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில்,”கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பொது மக்கள் நலன் கருதி தொற்றின் சமூகப்பரவலை தடுக்கும் நோக்கிலேயே அரசால் இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே, தேவையில்லாமல் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாமென தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் வேண்டுகோளாக விடுத்திருக்கிறது.
144 தடை உத்தரவை மதிக்கிறோம். இந்த பரப்புரை நேரம் போக நாங்களும் எங்கள் வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் செல்வதில்லை. எங்கள் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் அதிகாலையில் முக கவசம் அணிந்து அனைத்து வீடுகளிலும் மஞ்சள், வேப்பிலை அரைத்து நீரில் கலந்து தெளித்து வருகிறோம். மேலும், பொதுமக்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றோம். இது எல்லாம் பொதுமக்களின் நலனுக்காக தான் நாங்கள் செய்கிறோம். இது போன்ற அனைத்து கிராமப்புற இளைஞர்களும் செய்தால் கரோனா பரவுவதை தடுக்க முடியும்” எனக் கூறினர்.
இதனால், மேலமங்கலம் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த இளைஞர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : கோவிட்-19 முன்னெச்சரிக்கை : ஆளில்லா குட்டி விமானம் மூலம் தீவிரமடையும் கண்காணிப்பு!