புதுக்கோட்டையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கரோனா தடுப்பு மருந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்ட நிலையில் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் நடந்தால் விரைவில் தமிழ்நாடு கரோனா இல்லாத மாநிலமாக உருவாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் சேதமடைந்துள்ளது. இதற்கான இழப்பீடு பெற்றுத் தரப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜன.17ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடர் மழை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரால் சூழ்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று(ஜன.13) காலை விராலிமலை மலைப்பகுதியில் நெற் பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரும், 3000 ஏக்கர் பரப்பளவில் இதர பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக்கூறி உரிய இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.