புதுக்கோட்டை: ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொறுப்பாளராக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வம் அழகப்பன். பின்னர் அவர் மாவட்டத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே திராவிட கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சியான பாஜகவை தமிழகத்தில் வளர்த்தெடுக்கும் நடவடிக்கையாக மாவட்டங்களை பிரித்தது, தலைமை. அவ்வாறே ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டமாக இருந்தது, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவராக இருந்த செல்வம் அழகப்பன், கிழக்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டார். மேற்கு மாவட்ட தலைவராக மாவட்ட பொதுச்செயலாளராக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த பத்தாம் தேதி புதுக்கோட்டை திருவப்பூர் அருகே மிகப்பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட பாஜக புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி காட்டினார், மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார்.
கிழக்கு, மேற்கு என இரு நிர்வாகிகள் இருந்தாலும் பாஜக அரசு தொடர்பு பிரிவு தலைவராக இருந்த சீனிவாசன் தனக்கென தனி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார். இவரது ஸ்டைலே வித்தியாசமான போராட்டங்கள் தான். குறிப்பிட்ட ஒரு சில நிர்வாகிகளை தன்னுடன் வைத்துக் கொண்டு, மாவட்டத்திற்குள் தனி அரசியல் நடத்தி மற்றவர் பார்வையை தன் பக்கம் ஈர்ப்பது அவருக்கு வழக்கம்.
பிரதமர் மோடி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தது, திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு மூளை வளர வேண்டி வெண்டிக்காயை விரைவு தபாலில் அனுப்பியது, தினக்கூலி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீடு செய்தது, டாஸ்மாக் மதுக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் கேட்பதற்கு பிச்சை எடுக்கலாம் என்று கூறி பிச்சை பாத்திரத்துடன் போராட்டம் நடத்தியது என கவனம் ஈர்த்தார்.
கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக பேனா வேணாம் என்ற கடல் அன்னையின் சுவரொட்டி ஒட்டியது, டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு பில் கேட்டு, சுவரொட்டி ஒட்டியது போன்றவையும் சீனிவாசனின் சேட்டைகளில் அடங்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 20ம் தேதி புதுக்கோட்டையில் கள்ளச்சந்தை மதுவிற்பனைக்கு எதிராக நூதன போராட்டம் நடத்தினார். ஒரு சில பாஜக நிர்வாகிகளை வைத்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, 24 மணி நேரமும் மது கிடைக்க வழி வகையைச் செய்யும் தமிழக அரசு வாழ்க என்று போராட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
இது பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்திலும் எதிரொலித்தது. கருப்பு முருகானந்தம் வெளியேறியதும், காரசார விவாதத்தில் காட்டம் கூடியது. சீனிவாசன் தலைமையிலான போராட்டத்தில் பங்கேற்றவரான சண்முகசுந்தரம் என்பவரை மடக்கி கேள்வி கேட்டார், மாவட்ட தலைவர் விஜயகுமார்.
என்ன தான் கிண்டல் செய்வதாக இருந்தாலும், அப்போது தமிழக அரசு வாழ்க என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என விஜயகுமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவே அரசியல் நடத்துகிறீர்களா என்று ஆவேசமான விஜயகுமார், இனி கட்சி கட்டுப்பாட்டை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மாவட்ட தலைவருக்கு எதிராக, சீனிவாசன் சமூக வலைதளத்தில் காட்டமாக ஒரு பதிவு செய்துள்ளார். உங்களைப் போல மாமூல் வாங்கி பிழைப்பு நடத்துபவன் நானில்லை என கூறியுள்ள சீனிவாசன், சாதாரண தொண்டனாக பணி செய்வேன்; முடிந்தால் என்னை சமாளித்துப்பாருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் தமிழகத்தில் பூத் கமிட்டி வாரியாக கட்சியை வலுப்படுத்தும் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. ஆனால், உள்ளூர் நிர்வாகிகளின் மோதல் போக்கு கட்சியை வளர்க்க உதவாது என்கின்றனர், சில தொண்டர்கள். இருப்பினும் அண்ணாமலை கூறியது போன்று பாஜக வளர்ந்து வருவதால் தான் தங்கள் கட்சியில் மோதலும் அதிகரித்துள்ளது என்கிறனர், சில சீனியர்கள்.