புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் செய்யாமால் இருந்த பல்வேறு குளங்களில் தூர்வாரும்
பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 650 குளங்களும் ஏரிகளும் குடிமராமத்து பணிகள் மூலம் சீரமைக்கப்பட்டு வருவதாக கூறினார். இதனால் விவசாயிகளும் ஆயக்கட்டு தாரர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
முதலமைச்சரின் ஆலோசனைப்படி காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரும் வகையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் விரைந்து நடைபெறுவதால் இந்த ஆண்டு கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் நிச்சயம் சென்று சேரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையாக வீடுகள் கட்டி கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், நகரப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகள் முறையாக கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். புதுக்கோட்டை மச்சுவாடி நரிமேடு பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் வீடுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.