புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ. 298.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கான பூமி பூஜையினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது, "முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இன்றைய தினம் விராலிமலையில் ரூ. 298.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதன் மூலம் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து சரியான உரிய முறையில் சென்று சேர்ந்து பயனுள்ளதாக அமையும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு சிறப்பு வருவாய் அலுவலர், 3 வட்டாட்சியர்கள் மற்றும் இதற்கென பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி தலா ரூ. 1,02,500 என மொத்தம் ரூ. 5,12,500 உதவித்தொகையினை வழங்கினார்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி