புதுக்கோட்டை: பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம், பொன்னடபட்டியைச் சேர்ந்த பொறியாளர் சரவணன், சரண்யா தம்பதியருக்கு திருமண விழா நடந்தது. இவ்விழாவில் பாரம்பரியம் மிக்க நாட்டு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் கண்காட்சி திருமண நிகழ்வில் ஒரு அங்கமாக இடம்பெற்றது. இது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இக்கண்காட்சியில் நாட்டு மாடு வகைகளான புளிகுளம் காளை, காங்கேயம் காளை, குரால், செவலை எனும் ஜல்லிக்கட்டு காளைகளும், ரேக்ளா ரேஸ் காளை, சண்டை கிடாய், வண்டி மாட்டு வகை காளைகள் இடம்பெற்றிருந்தன. திருமண விழாவிற்கு வந்தவர்களை வரவேற்க வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பேனரில் மாப்பிள்ளை, மணப்பெண் புகைப்படம் இடம்பெறாமல் தங்களின் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளை புகைப்படம் மட்டும் இடம்பெறும் வகையில், ஃபிளெக்ஸ் போர்டு வைத்திருந்தது காண்பவரை வியக்க வைத்தது.
மேலும், மணமக்களின் இச்செயலை கண்ட உற்றார், உறவினர், பொதுமக்கள் அவர்களை வாழ்த்தியதோடு, பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும், கண்காட்சியில் இடம்பெற்ற கால்நடைகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:Video: சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்:3 கி.மீ. மகனுடன் ஓடி உற்சாகப்படுத்திய தாய்!