புதுக்கோட்டை மாவட்ட தணிக்கை அலுவலராகப் பணியாற்றிவருபவர் பூரணவல்லி. இவர் புதுக்கோட்டை திருவப்பூர் சவுராஷ்டிரா தெருவில் வசித்துவருகிறார். இவருடைய கணவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்றுவிட்டு இன்று (ஏப். 16) காலை வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பிய நிலையில் இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான காவல் துறையினர் விரைந்துவந்து சோதனை செய்ததில் வீட்டு பீரோவிலிருந்த 100 பவுன் தங்க நகைகள் ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகையைப் பதிவு செய்துவருகின்றனர். இது தொடர்பாக திருக்கோகரணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா 2 ஆவது அலை: தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்