புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் வனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளை பெற்ற வனிதா ஒரே நேரத்தில் இருவரையும் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் கவனிக்க முடியாமல் மனைவி சிரமப்படுவதை பார்த்து வீரமணி வேதனையடைந்துள்ளார். இந்த சூழலில் தனது மனைவியின் கவலையைப் போக்க நினைத்த வீரமணிக்கு திடீரென புதிய யோசனை தோன்றியுள்ளது.
பேருந்து கண்ணாடி முன்புறம் நீரை துடைக்கும் கருவியான பைபர் மோட்டாரை வைத்து தொட்டிலை ஆட்டும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து தனது மனைவியின் கஷ்டத்தைப் போக்க உதவியுள்ளார். இரண்டாயிரம் ரூபாய் செலவில் இதனை உருவாக்கி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். யோசனை சிறியதுதான் ஆனால் அவரது முயற்சி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துவருகிறது.
இதுகுறித்து வீரமணி கூறுகையில், ”எனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தால் ஏதேனும் செய்யவேண்டும் என்று சிந்தித்தபோதுதான் இந்த கருவியை நான் வடிவமைத்தேன். இதனால், மின்சார தொகை அதிகமாக வரும் என்று யாரும் பயப்படத் தேவையில்லை. அதிகளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாது. நான் தயாரித்தபோது 2000 ரூபாய் செலவு செய்தேன். இக்கருவி மூலம் எனது மனைவி சற்று ஓய்வு எடுக்கவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் முடிகிறது.
குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு சுவிட்சை ஆன் செய்தால் தொட்டில் தானாக ஆடும். இதைப்பார்த்த எனது நண்பர்களும் எனக்கு வேண்டும் என்று கேட்டார்கள். இதே போல செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை நிறைய குழந்தைகளை இக்கருவி வளர்த்திருக்கிறது. எங்கள் ஊரிலேயே நிறைய பேருக்கு இந்தக் கருவியை நான் செய்து கொடுத்திருக்கிறேன். இந்தக் கருவியை எனது மனைவி செல்லமாக மின்சார பாட்டி என்றுதான் கூறிவருகிறார்' என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.